வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
மாத்தறை கொடபொல இலுக்பிடிய கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாடு வெற்றி பெறாது. கல்வித் திட்டங்களை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஆனால் அந்தத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு மனித வளத்தை நிர்வகிக்க வேண்டும்.
கடந்த காலங்களில், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு வரிசைகள் ஏற்பட்டன. அந்த நிலையில் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ரணில் விக்ரமசிங்க, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி இந்நாட்டின் பொருளாதார நிலைமையை குறிப்பிடத்தக்க நிலைக்குக் கொண்டு வர பாடுபட்டார். அதற்கு அப்பால் இலங்கையின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு புதிய வேலைத் திட்டம் அவசியம்.
அதற்காக ஜனாதிபதி தற்போது பல சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றார்.
இலங்கை மத்திய வங்கி சுயாதீனமான நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய வங்கி விவகாரங்களில் இனி அரசியல்வாதிகள் தலையிட முடியாது என்பதே இதன் பொருள். மத்திய வங்கி நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டும். மேலும், ஒவ்வொரு நிறுவனமும் நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டும்.
அதற்குத் தேவையான சட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு செயற்படாத நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அத்துடன், நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான பொருளாதார வேலைத் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.