நாரம்மல – ரன்முத்துகல பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாரம்மல – ரன்முத்துகல பகுதியில் இன்று அதிகாலை இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இணையம் ஊடாக தொலைபேசிகளை விற்பனை செய்வதாகக் கூறி போலியான வர்த்தகத்தை முன்னெடுத்த சந்தேகநபர் ஒருவரே பொலிஸாரின் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், தன்னை சந்திக்க வந்த வாடிக்கையாளர்களைத் தாக்கி, கொள்ளையிட முயற்சித்தபோதே பொலிஸார் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் 28 வயதான சந்தேகநபர் ஒருவரே உயிரிழந்துள்ளார் என்றும் துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து அவருடன் வருகைத் தந்திருந்த மேலும் இரு கொள்ளையர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐபோன் விற்பனை தொடர்பாக பத்திரிகையொன்றில், குறித்த சந்தேகநபர்கள் விளம்பரமொன்றை பிரசுரித்துள்ளனர். குறித்த விளம்பரத்தைப் அவதானித்த நபர் ஒருவருக்கு விளம்பரம் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்ட நிலையில், பொலிஸாருக்கு அறிவித்து பொலிஸ் அதிகாரிகளுடன் கொள்ளையர்களை சந்திக்கச் சென்றுள்ளனர்.
நாரம்மல பகுதியிலுள்ள குறித்த இடத்திற்கு வருகைத் தருமாறு கொள்ளையர்கள் தெரிவித்ததோடு, குறித்த இடத்தை அடைந்ததும் குறித்த நபரின் வாகனத்தை கூரிய ஆயுதங்களால் கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் ஏற்பட்ட கைகலப்பின் போது, பொலிஸ் அதிகாரி ஒருவர் கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கிசூட்டை நடத்தியுள்ளார்.
அதில் ஒரு கொள்ளையர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்த இருவர் கொள்ளையர்களின் தாக்குதலால் காயமடைந்து குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.