கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் ஏற்றுமதியின் ஊடாக சுமார் 984 மில்லியன் ரூபாய் வருமானத்தை நாடு பெற்றுள்ளதாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார். அத்துடன், நாடு தற்போது சரியான பொருளாதார முன்னேற்ற பாதையை நோக்கி செல்வதுடன், கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து ஒரு நாடாக குறிப்பிடத்தக்களவு சாதனைகளை நாம் அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதுடன், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் சுமார் 05 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பாடசாலைக் காலத்திலேயே தொழில் முயற்சியாளர்களை நாம் உருவாக்குவதன் மூலம் நாட்டில் உற்பத்திப் பொருளாதாரத்தை வலுவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், முதலாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு வரையிலான 17 இலட்சம் பாடசாலை மாணவர்களின் போசாக்குத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், மதிய உணவு திட்டமும் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மேலும் குறிப்பிட்டார்.