தென்கொரிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மூலம் சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் அதிக நன்மைகளை பெற்றுள்ளதாக பிரதமர் தினேஸ் குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
தென் கொரியாவிற்கான இரண்டு நாள் உத்தேயோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஸ் குணவர்த்தன நேற்று மாகாண ஆளுநர் லீ சியோல் வூவை சந்தித்துக் கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பிரதமர் என்ற வகையில் இந்த மாகாணத்தின் புதிய பொருளாதார வளர்ச்சியினை ஆராயும் சந்தர்ப்பம் எமக்கு வழங்கப்பட்டது. இதற்காக ஆளுநருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநரின் வழிகாட்டலின் அடிப்படையில் இலங்கையின் பல வறிய பகுதிகளுக்கு, குறிப்பாக சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலை, இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு பல நன்மைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கல்வி மேம்பாடு, கிராமிய மக்களின் நலன்களுக்காக மிகவும் நெருங்கிய உறவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆளுநர் அவர்களே இலங்கைக்கு வந்து இந்த முன்மொழிவுக்கு கையொப்பமிட்டதுடன், தற்போது இந்த திட்டம் நடைமுறைப்படுத்தும் கட்டத்தை எட்டியுள்ளது.
இத்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நாம் எதிர்பார்க்கிறோம். மேலும், இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அன்பான வாழ்த்துக்களை நான் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்று பல துறைகளில் தொடர்புடைய புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய முதலீடுகள் தொடர்பாக தென் கொரியாவுடன் நெருங்கிப் பணியாற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த ஒத்துழைப்பை வலுப்படுத்தி, முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்று நாம் நம்புகிறோம்” இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த சந்திப்பின் போது கல்வி மற்றும் உயர்கல்வி, விவசாயம், கடற்றொழில், பெண்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி திட்டங்களை நாட்டில் முன்னெடுப்பதற்கு தென் கொரிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.