உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகப் புலனாய்வுத் தகவல் கிடைத்தும் அதனை தடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தவறியிருப்பாராயின் அது பாரிய தண்டனைக்குரிய குற்றமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பான வாக்குமூலம் நிமித்தம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்படடிருந்தது.
ஆனால் அவர் தம்மால் நீதிமன்றில் முன்னிலையாக முடியாது என நேற்று நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார்.அவரது ஆட்சிக்காலத்திலேயே உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றது.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் மக்களுக்கு பாரிய சந்தேகம் உள்ளது. அதேபோல் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டறிவதற்கான விசாரணைகளின் பின்னடைவு தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நாட்டின் முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க மக்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவித்த பாரிய சம்பவம் இதுவாகும். அதேபோல் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வருவதற்கு வழிவகுத்ததும் இந்த பயங்கரவாத தாக்குதல்களாகும்.
எனவே இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பிரதான சூத்திரதாரியை தாம் அறிவதாக மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
அவர் உண்மையிலேயே அதனை அறிவாராயின் பயங்கரவாத தாக்குதல் இடம்பெறபோவதாக புலனாய்வு தகவல் கிடைத்தும் அதனை தடுக்க தவறியமை பாரிய தண்டனைக்குரிய குற்றமாகும்.அல்லது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரே அவர் தகவல் அறிந்திருப்பாராயின் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்காமை அவரது பாரிய தவறாகும்.எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் கட்சி என்ற ரீதியில் நாம் எதிர்ப்பினை தெரிவிக்கின்றோம்” இவ்வாறு மரிக்கார் தெரிவித்துள்ளார்.