நிதிமோசடி குற்றச்சாட்டில் பிரபல நடிகை தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி நிதிமோசடியில் ஈடுபட்டதாக குறித்த இருவரும் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிதிமோசடி விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாவதை தொடர்ச்சியாக தவிர்த்து செயற்பட்ட நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை முன்னதாக நடிகை தமிதா அபேரத்ன இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இது குறித்து தமிதா தெரிவித்துள்ளதாவது” நான் தலைமறைவாகவில்லை.இந்த நாட்டில் தலைமறைவாக செயற்படுபவர் நானல்ல. 69 லட்சம் வாக்குகளைப்பெற்று ஆட்சியமைத்தவர்களுக்கு எதிராக போராடிய பெண் நான். நான மரணத்திற்கு பயப்படமாட்டேன். இன்று நீதிமன்றில் சரணடைகின்றேன். பொதுஜன பெரமுனவும் தேஷபந்து தென்னக்கோனும் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.
நாட்டின் பொருளாதார கொள்ளையர்கள் யார் என்பதை உயர்நீதிமன்றமும் அறிவித்திருந்தது. ஆனால் அவர்கள் இன்னும் சுதந்திரமாக வாழ்கின்றனர். தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பான குற்றப்புலனாய்வு பிரிவுஎன்மீது முறைப்பாடு செய்துள்ளது.நான் இம்முறைசிறைச்சாலையிலேயே புத்தாண்டை கொண்டாடவுள்ளேன்.
இதேவேளை விசாரணை நிமித்தம் நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதவி இடமாற்றம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விசாரணை நிமித்தம் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதவி இடமாற்றம் தொடர்பாக பொலிஸ் பரிசோதகர்கள் குழுவினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய அமர்வு முன்னிலையில் உயர்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.