ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய அரசியல் கூட்டணி நாளை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது. இதேவேளை தேர்தலில் எந்தவொரு கட்சியம் தமக்கு சவாலாக அமையாது என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி நாளை முற்பகல் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் நாளைய தினம் புதிய அரசியல் கூட்டணியில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம் மரிக்கார் தெரிவித்தார்
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே மரிக்கார் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து மரிக்கார் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை எதிர்நோக்குவதற்காக முன்னெடுக்கப்படும் அடுத்த கட்ட நடவடிக்கையாகவே புதிய கூட்டணி உருவாக்கப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி நாளை கைச்சாத்திடவுள்ளது. ஜீ எல் பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் நாளை எம்முடன் புதிய அரசியல் கூட்டணியில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளனர்.
எதிர்வரும் தேர்தல்களை இலக்குவைத்து மாத்திரம் நாம் கூட்டணி அமைக்கவில்லை.கொள்கை திட்டங்களின் அடிப்படையிலும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையிலேயே கூட்டணியில் இணைவுள்ளோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.