டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஐபோனிலிருந்து தகவல்களை வழங்குவதற்கு அப்பிள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கேஜ்ரிவால், மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அண்மையில் கைதுசெய்யப்பட்டார்.
அமுலாக்கத்துறையினரின் விசாரணைகளையடுத்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட கெஜ்ரிவாலை, எதிர்வரும்14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்போது, கேஜ்ரிவால் தனது அப்பிள் ஐபோன் மற்றும் அப்பிள் மடிக்கணினியின் கடவுச்சொல்லை (பாஸ்வேர்ட்) தெரிவிக்காத நிலையில், அவற்றை ஹேக் செய்து தகவல்களை எடுக்க உள்ளதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறியிருந்தது.
இதனையடுத்து, கெஜ்ரிவாலின் டிஜிட்டல் ஆவணத் தகவல்களை எடுத்துத் தருமாறு ஆப்பிள் நிறுவனத்திடம் அமலாக்கத்துறை உதவி கோரியுள்ளது.
இதற்கு, உலகத் தலைவர்களின் ஐபோன்களிலிருந்து தகவல்களை எடுத்துத்தர முடியாதெனவும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உரிமையாளர் நினைத்தால் மட்டுமே இதனை திறக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.