ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ள நிலையில் கட்சியின் தலைமையகத்திற்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
காணமல்போன ஆவணங்கள் தொடர்பாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவினால் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்தே இவ்வாறு பல ஆவணங்கள் காணமால் போயுள்ளதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துஷ்மந்த மித்ரபால குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையக ஊழியர்கள் உட்பட பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதனையடுத்து, விசாரணைகளுக்காக கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகள் முடியும் வரை சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் சம்பவத்துடன் தொடர்பில்லாத சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களையும் தலைமையகத்தின் கேட்போர் கூடத்துக்குள் நுழையவிடாமல் பொலிஸார் தடுத்துள்ளதாகவும் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.