”கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடித் தனமான அரசியல், தமிழ் மக்களிடம் செல்லுபடியாகாது” என முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பொன்னாவெளி கிராம மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை முறியடிக்க வேறு பிரதேசங்களில் இருந்து 6பேரூந்துகளில் மக்கள் அழைத்துவரப்பட்டனர். எனினும் போராட்டத்தின் உண்மை நிலையை அறிந்து குறித்த மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தெளிவுபடுத்தும் விதமாக நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ஜீவன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” முதலில் நாம் பேரூந்துகளில் அழைத்து வரப்பட்ட மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் தமிழ் மக்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் . பொன்னாவெளி கிராம மக்களின் போராட்டத்தை முறியடிக்கும் விதமாக குறித்த மக்களுக்கு ஆளுக்கு தலா ஆயிரம் ரூபாய் தருவதாகவும் கடலட்டை பண்னைக்கான அனுமதிபத்திரம் தருவதாகவும் கூறியே அழைத்து வரப்பட்டனர்.
எனினும் அங்கு வந்த மக்கள், பொன்னாவெளி கிராமத்தில் இடம்பெறும் போராட்டத்தின் உண்மை நிலையை அறிந்து போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் ஜெயபுரம் மற்றும் முழங்காவில் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொன்னாவெளி மக்களுக்காக தமது நேர்மையான செயற்பாட்டை செய்திருந்தனர். அவர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
டக்ளஸ் தேவானந்தாவின் செயல் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினையே பாதிக்கும். வடக்கில் கடல் தொழில் அமைச்சரால் வாக்கு எண்ணிக்கை வீழ்ச்சியடையும். மேலும் இவ்வாறான செயற்பாடுகளை பார்க்கும் போது இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலா என்றும் எண்ணத்தோன்றுகிறது” இவ்வாறு ஜீவன் தெரிவித்துள்ளார்.