”நாட்டின் ஜனாதிபதியைத் தீர்மானிப்பவர்கள் தமிழர்களாக இருக்கவேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” வடமாகாணத்தில் கிளிநொச்சி என்னும் இடத்திற்குள்ளேயே செல்லமுடியாத அமைச்சர் ஒருவரின் ஆதரவினை கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெறுவார் என நினைத்தால் அது ஒரு சவாலான விடயம் தான்.
ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அனுரகுமார திசாநாயக்காவினை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்த கட்சியில் போட்டியிடப் போகின்றார்? கூட்டமைப்பினை எவ்வாறு அமைக்கப்போகின்றார்? என்பதே தற்போது எழுந்துள்ள பிரச்சினை.
இன்று மொட்டுக்கட்சியும் பிரிந்த நிலையில் உள்ளது.மொட்டுக்கட்சி உருவாக்கப்பட்டது ராஜபக்ஸக்களின் எதிர்காலத்திற்காகும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அனைத்து பொறுப்புகளும் மகிந்த ராஜபக்ஸவிடம் இருந்தநேரத்தில் அதனை மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கிவிட்டு மொட்டுக்கட்சியை ஆரம்பித்தனர். இன்று அந்த கட்சி குழப்பநிலையில் உள்ளது.
இன்று நாமல் ராஜபக்ஸ தனது தந்தையினைப் போன்று கும்பிடு போட்டுக்கொண்டு விகாரைகள் எல்லாம் சுற்றித்திரிகின்றார். இவர்கள் விகாரைகளை சுற்றித் திரிவதே நாட்டுக்கு ஒரு ஆபத்தான நிலைமையாகப் பார்க்கப்படுகின்றது.
அதேநேரம் மொட்டுக்கட்சின் பிரதான உறுப்பினரும் பசில் ராஜபக்ஸவின் வலதுகையுமான பிரசன்ன ரணதுங்க நாமல் ராஜபக்ஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தால் மொட்டு பிளவுபடும் என்று சொல்கின்றார்.
இன்று அவர்களுக்குள்ளே குழப்பம் இருக்கின்றது. எதிர்வரும் காலத்தில் தேர்தல் ஒன்று நடந்தால் அந்த சந்தர்ப்பத்தினை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஐந்து வருடத்திற்கு ஓரு முறை வரும் சந்தர்ப்பத்தினை மக்கள் சரியாக பயன்படுத்தாமல் விட்டால் அடுத்த ஐந்து வருடத்திற்கு எமது எதிர்காலம் மிக மோசமான எதிர்காலமாகவே இருக்கும்” இவ்வாறு இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.