பலமான கட்சிகளைப் பிளவுபடுத்தும் செயற்பாட்டை ஜனாதிபதி கச்சிதமாக கையாண்டு வருவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைப்பதற்கான செயற்பாடுகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கட்சியின் தலைவர் இல்லாமல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசியல் குழு கூட்டத்தை கூட்ட முடியாது.
கட்சியின் செயற்குழு மற்றும் நிறைவேற்று சபை ஊடாகவே தலைவரை நியமிக்க வேண்டும்.
தலைவராக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தவுடன் அரசியலமைப்புக்கு முரணான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
சுதந்திரக் கட்சியின் தலைவரின் அழைப்புக்கு அமையவே கட்சியின் ஆலோசகர் கூட்டங்களில் பங்குபற்ற முடியும்.
ஆனால் தற்போது கட்சியின் ஆலோகரான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமைத்துவத்தில் அரசியல் குழு கூட்டம் கூட்டப்பட்டு, தவறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைக்கும் செயற்பாடுகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தவறான தீர்மானங்களினால் கட்சி பலவீனமடைந்துள்ளது.
ஒரு தரப்பினர் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி தொடர்பில் சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.
மே தினத்துக்கு முன்னர் புதிய அரசியல் கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம்.
அரசியல் கட்சிகளை பிளவுப்படுத்தும் செயற்பாட்டை ஜனாதிபதி வெற்றிகரமாக முன்னெடுக்கிறார்” என உதய கம்மன்பில மேலும் குறிப்பிட்டுள்ளார்.