புதிய சாதனைகளை படைத்து, புதிய வெற்றிகளை பெற்று, தடைகளை எல்லாம் தகர்த்து, வளமானதொரு நாட்டை கட்டியழுப்ப இப்புத்தாண்டில் அனைவரும் உறுதி ஏற்போம். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம் – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அமைச்சர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,
“ சித்திரை புத்தாண்டை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். மக்கள் வாழ்வில் புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் வருடமாக இவ்வருடம் அமையட்டும்.
இலங்கையில் இன நல்லிணக்கத்துக்கு சிறந்த அடையாளமாக சித்திரை புத்தாண்டு திகழ்கின்றது. அனைத்து இன மக்களும் இக்காலகட்டத்தில் ஐக்கியத்துடன் செயற்படுவார்கள். இந்நிலைமை நீடிக்க வேண்டும்.
அதேபோல எமது நாட்டை மீட்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். அவ்வாறு ஒன்றுபட்டால் வங்குரோத்து இல்லாத நாட்டில் மிகவும் சந்தோஷசமாக அடுத்த புத்தாண்டை கொண்டாடக்கூடியதாக இருக்கும்.” – என்றார்.