”பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலைக்கு பொருத்தமான நேரம் பார்த்து செல்ல வேண்டும். இப்பொழுது ராகு காலம் என்பதால் நான் செல்லவில்லை” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது உடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” கடும் வறட்சியான காலநிலை காணப்படுவதால் அதிக நீர் ஆவியாகின்றது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் சிறுதாணிய செய்கை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம்.
நெற்செய்கைக்கு அதிக நீர் தேவைப்படுகின்றது. இதனால் அதிகளவிலான நீர் ஆவியாகி வீணாகின்றது. அதனை தவிர்க்கும் வகையில் 1000 ஏக்கரில் சிறுதானிய செய்கையை மேற்கொள்வது தொடர்பில் முதல் கட்டமாக ஆராய்ந்திருந்தோம். அதற்கு சாதகமான சூழல் காணப்படுகின்றது.
அதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது. அது தவிர கிளிநொச்சி சேவைச் சந்தையின் குறைபாடுகள், பூநகரி பிரதேச சபை ஊடாக மணல் விற்பனை நிலையம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. கிடைக்கும் மணல் வளம் நியாயமில்லாமல் மக்களிற்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றது அதனை கட்டுப்படுத்தவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது”இவ்வாறு தெரிவித்துள்ளார்.