தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை நீந்தி கடக்க முயன்ற இந்தியாவின், பெங்களுரைச் சேர்ந்த 78 வயதுடைய முதியவர் நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீற்றர் தூரம் கொண்ட பாக்கு நிரினைப் பகுதியை சமீப காலமாக பல நீச்சல் வீரர்கள் நீந்தி கடந்து சாதனை படைத்து வருகின்றனர்.
இந்நிலையில், தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனைவரையான தூரத்தை நீந்தி கடப்பதற்காக இந்திய இலங்கை இருநாட்டு அரசாங்கத்திடம், உரிய அனுமதி பெற்று நேற்று 31 பேர் கொண்ட குழு ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் தலைமன்னாருக்கு வருகை தந்துள்ளனர்.
அங்கிருந்து இன்று அதிகாலை சுமார் 12.10 மணி அளவில் கடலில் குதித்து தொடர் ஓட்டம் முறையில் இந்தக் குழுவினர் நீந்தத் தொடங்கியுள்ளனர்.
இதன்போது சுமார் மூன்று மணி அளவில் தொடர் ஓட்ட நீந்துதலில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியாவின், பெங்களுர் மாநிலத்தைச் சேர்ந்த 78 வயதுடைய கோபால் ராவ் என்பவருக்கு திடீரென நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவக் குழு, மாரடைப்பினால் குறித்த முதியவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கோபால் ராவ் உடல், தனுஷ்கோடி பாலம் மீன்பிடித் துறைமுகத்திற்கு எடுத்து வந்ததையடுத்து, உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடன் வந்த நபர் ஒருவரின் இந்த உயிரிழப்பால், ஏனைய 30 பேரும் மன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையான சாதனையைக் கைவிட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோபால் ராவ் உயிரிழந்த விடயம் தொடர்பாக ராமேஸ்வரம் கடற்கரை பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.