கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கத்தில் நேற்று இடம்பெற்ற அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் 10 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”1981 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் கல்வி வெள்ளை அறிக்கை கொண்டுவரப்பட்ட வேளையில், பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்யுமாறு பலரும் கூறியபோதும், நான் அதனை செய்யவில்லை.
அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை வழங்குவதே கல்வி அமைச்சின் பொறுப்பாகும். அதற்கு மேலதிகமான பிரத்தியேக வகுப்பு முறைமைகள் நாட்டுக்குள் உருவாகி வெகுவாக வளர்ந்துள்ளன. அன்று கல்வித் துறையில் காணப்பட்ட குறைப்பாடுகள் மற்றும் அரசியல் தலையீடுகளை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் மாற்று வழியாக பிரத்தியேக வகுப்பு முறையை தெரிவு செய்தனர்.
இன்று பாடசாலைக் கல்வியும் பிரத்தியேக வகுப்பு முறையும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டு முன்னேற்றம் கண்டுள்ளன.
கொரோனா காலத்தில் ஒன்லைன் தொழில்நுட்பம் மூலம் கல்வியை வழங்கியது பற்றி இங்கு குறிப்பிடப்பட்டது.
2017 ஆம் ஆண்டில், உயர்தர மாணவர்களுக்கு ஒன்லைன் கல்வியை வழங்குவதற்கான டெப்களை வழங்க கல்வி அமைச்சிடம் நாம் முன்மொழிந்தோம்.
அதற்குத் தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டன. ஆனால், எதிர்ப்புகள் எழுந்ததால், கல்வி அமைச்சு அதனை கைவிட்டது.
அன்று அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், ஒன்லைன் கல்வி அங்கிருந்து ஆரம்பமாகியிருக்கும்.
ஆனால் இன்று அந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளமைக்காக அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தினை பாராட்டுகின்றேன்.
கடந்த பொருளாதாரச் சரிவின்போது பல்வேறு அனுபவங்களைப் பெற்றோம். நாம் அந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்போது படிப்படியாக மீண்டு வருகிறோம். புதிய பொருளாதாரத்துடன் நாம் முன்னேற வேண்டும். இவை அனைத்துடனும் நாட்டுக்கு ஏற்ற கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும்.
பாடசாலைக் கல்விக்கும், பிரத்தியேக வகுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன, அதேபோன்று ஒன்லைன் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை கல்வியில் எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
நவீன கல்வி முறைக்கு நாம் செல்ல வேண்டும்.
அது 2030 ஆம் ஆண்டுக்கானது அல்லாமல், 2050 ஆம் ஆண்டுக்கான கல்வி முறையாக இருக்க வேண்டும். அந்த புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு, நவீன கல்வி முறைக்கு செல்ல வேண்டும். கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றக்கூடாது.
எனவே, எதிர்காலக் கல்வி முறையை அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து தீர்மானிக்க வேண்டும். அதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை செய்து கொடுக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி, 2050 ஆம் ஆண்டாகும்போது இந்நாட்டிற்கு சிறந்த கல்வி முறை எது என்பதை இந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் கலந்துரையாடப்பட வேண்டும். அதன் பிறகும் ஏற்படும் தொழில்நுட்ப மாற்றங்களோடு நாம் தொடர்ந்து பரிமாற்றத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.