உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 5வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் போது கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்வைத்த குற்றச்சாட்டினை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுகிழமை கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற நினைவு தின நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச மீது பல குற்றச்சாட்டுக்களை பகிரங்கமாக முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையால் முன்வைத்த 4 பிரதான குற்றச்சாட்டுகளை மேற்கோள்காட்டி டினை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தொடர்பான கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட இரு தரப்புகள் குறித்த உண்மைகளை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறைப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக கர்தினால் தெரிவித்த கருத்தை கோட்டாபய மறுத்துள்ளார்.
அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் கர்தினாலை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவேயில்லை என்றும் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரை இடமாற்றம் செய்தார் என்று கர்த்தினால் முன்வைத்த குற்றச்சாட்டையும் கோட்டாபய மறுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தாத கார்தினால் தன்மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பதாக கோட்டாபய மேலும் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது அரசியல்வாதிகள் அல்ல என்றும் மாறாக பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறை என்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.