அரசாங்கம் எதிர்பாத்த இலக்கினை தாண்டி அரச வருமானம் 6 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த வருடத்தின் முதல் காலாண்டில், அரச வருமானம் 834 பில்லியன் ரூபாயாக உயர்வடைந்துள்ளது.
இது எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு அதிகம் என்பதை குறிப்பிடவேண்டும். தற்போதைய மத்தியவங்கிச் சட்டத்தின்படி கடன் பெறவோ அல்லது பணத்தை அச்சிடவோ முடியாது. இதனால் இந்த ஆண்டு பணப்புழக்கத்தை முகாமைத்துவம் செய்வதில் திறைசேரி கடும் சவாலை எதிர்கொள்கிறது.
அனாலும் நாட்டில் சரியான முறையில் நிதி நிர்வாகம் முன்னெடுக்கப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் 93ஆயிரத்து 670 மில்லியன் ரூபாய் சமுர்த்திக் கொடுப்பனவுக்காக செலவிடப்பட்டுள்ளது. ஆனால் 2024 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் 1இலட்சத்து 17ஆயிரத்து 107 மில்லியன் ரூபாய் நிதி நலன்புரி உதவிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது.
இது 2020 ஆம் ஆண்டை விடவும் 2024 ஆம் ஆண்டில் இந்த செலவீனம் 25 சதவீத அதிகரிப்பை காண்பிக்கிறது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 430 பில்லியன் ரூபாயை ஈட்டியுள்ளது. நான் வழங்கிய அனைத்து தரவுகளின் அடிப்படையில் நாட்டின் பொருளாதார நிலைமை சுமூகமான தன்மையை அடைந்துள்ளதை உறுத்திப்படுத்துவதை அவதானிக்கமுடிகின்றது” இவ்வாறு ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.