மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
கொழும்பு, ITC ரத்னதீப அதி சொகுசு ஹோட்டல் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,
“ITC நிறுவனத்தை இலங்கைக்கு வரவேற்கிறேன். இது ஆசியாவின் முதலாவது ஐந்து நட்சத்திர ஹோட்டலான காலி முகத்திடல் ஹோட்டலுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் கொழும்பு நகரம் சுற்றுலா கேந்திரமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியாவிற்குள் நிர்மாணிக்கப்பட்ட 10,000 அறைகளை கொண்ட ஹோட்டல் கட்டிடத்திற்கு பின்னர் அடுத்தபடியாக அவர்கள் செல்லக்கூடிய சிறந்த இடமாக ITC நிறுவனம், இலங்கையை தெரிவு செய்துள்ளமை சிறப்பம்சமாகும்.
அவர்களால் மேம்படுத்தக்கூடிய பல இடங்கள் இலங்கையில் அமைந்துள்ளன.
அடுத்த தசாப்தத்தில் இலங்கை ஜனாதிபதி மாளிகை மாதிவெலவிற்கு கொண்டு செல்லப்படும்.
இதனால், கொழும்பு குடியரசு சதுக்கம், கடற்படை தலைமையகம், பழைய இறங்குதுறை, சுங்கத் தலைமையகம், தபால் நிலையம் என அனைத்தையும் கொழும்பு சுற்றிலா நகரத்தின் அங்கமாக மேம்படுத்த முடியும்.
இன்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமையை நீங்கள் மறந்திருக்கப்போவதில்லை. ஜனாதிபதியின் அலுவலகம் சுற்றி வளைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பொருளாதார வீழ்ச்சியின் காரணமாகவே மக்கள் அதில் பங்கெடுத்தனர்.
இருப்பினும் அந்த பொருளாதார சரிவிலிருந்து இரண்டு வருடங்களில் நாட்டை மீட்டெடுக்க எம்மால் முடிந்தது.
தற்போதும் கொழும்பு சுற்றுலா நகரமாக மாறியுள்ளது.
நட்சத்திர ஹோட்டல்கள் பல காணப்படுவதால் சுற்றுலா வியாபாரத்தின் மீது நம்பிக்கை வைக்க முடியும்.
சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கான அஸ்திரமாகவும் அது அமைந்திருக்கும். சுற்றுலா வியாபாரத்தினால் இலங்கையை துரிதமாக மீட்கலாம்.
அதற்கான வசதிகளை வழங்க நாம் தயார். அவ்வாறானதொரு மக்கள் போரட்டம் மீண்டும் ஏற்படாதவாறான பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டும்.
அதற்கு தேவையான திட்டங்களை நாம் செயற்படுத்துவோம். இந்த திட்டங்களால் பொருளாதாரத்தையும் நிலைப்படுத்த முடியும்.
அதனால் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்வடையும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.