இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது.
இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.
அந்தவகையில் கேரளாவில் 20 தொகுதிகள், கர்நாடகாவில் 14 தொகுதிகள் , ராஜஸ்தானில் 13, மகாராஷ்டிராவில் 8 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 8 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகள், அசாமில் 5 தொகுதிகள் , பீகாரில் 5 தொகுதிகள், சத்தீஸ்கர், மேற்கு வங்காளத்தில் 3 தொகுதிகள் , மணிப்பூர் , திரிபுரா , காஷ்மீரில் தலா ஒரு தொகுதி என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
2-ம் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய பிரதேசத்தின் பீட்டுல் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணமடைந்ததால், அந்த தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. எனவே மீதமுள்ள 88 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , 2-ம் கட்ட தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15.88 கோடியாகும். இவர்கள் வாக்களிப்பதற்காக 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.