2009 திலிருந்து 2023 வரை இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட, தற்போதிருக்கும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளதாக ரெலோ இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருனாகரம் தெரிவித்துள்ளார்.
ஆதவன் செய்திப்பிரிவு எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளிக்கும் இவ்வாறு தெரிவித்த அவர்,
“தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகும்போது, தமிழீழ விடுதலைப்புலிகள், இயங்கு நிலையில் இருந்தார்கள்.
அப்போது, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளாளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவானது.
கடந்த காலங்களிலே இருந்த கசப்பான அனுபவங்களையெல்லாம் மறந்து, தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் ஒரு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவானது.
2019 க்கும் பின்பு, தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்பந்தன் ஐயா தலைமையில், தமிழரசுக் கட்சியின் தலைமையில் வந்ததன் பின்னர் அதன் தேய்வு ஆரம்பமானது.
2019 இல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழுவினரின் வெளியேற்றம் 2015 இல் சுரேஷ் பிரேமச்சந்திரனின் வெளியேற்றம், 2013 இல் வட மாகாண சபை முதலமைச்சராக வந்து 2016 இல் விக்னேஷ்வரனின் வெளியேற்றம் போன்றவை இவ்வாறு தமிழ் கூட்டமைப்பில் தேய்வை உருவாக்கியது.
2023 இல் உள்ளுராட்சி மன்ற தேர்தலின் அறிவிப்பையடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு, தமிழரசுக்கட்சியும் வெளியேறியது.
2009 க்கும் 2023 க்கும் இடைப்பட்ட காலத்திலும் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பல பிளவுகள் இருந்தன.
ஆனால், இன்று ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஒரு கட்டமைப்பாக ஒரு நிர்வாகத்துடன் பதிவு செய்யப்பட்டு கட்சியாக இருக்கிறது.
தனித்து நிற்கும் தமிழரசுக்கட்சியும் இன்று இரண்டாக பிளவுப்பட்டு நீதிமன்றத்திலேயே நிற்கின்றது.
2009 க்கு முன்பிருந்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு வேறு.
2009 திலிருந்து 2023 வரை இருந்த தமிழ்தேசியக் கூட்டமைப்பை விட தற்போதிருக்கும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றதாக இருக்கிறது.” என அவர் தெரிவித்தார்.