ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தினால் அவர் இனவாதத்தைத் தூண்டிவிடுவார், அதன்மூலம் ராஜபக்சக்களையும் அவர்களின் பொது வேட்பாளராக வரக்கூடிய ரணில் விக்கிரமசிங்கவையும் வெல்ல வைப்பதற்காக அவர் மறைமுகமாக உதவுவார் என்ற ஒரு வாதம் சில அரசியல்வாதிகளினாலும்,யாழ்ப்பாணத்திலிருந்து வரும் சில ஊடகங்களிலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றது.ஊடகங்களின் ஆசிரியர் தலையங்கங்களிலேயே அது தொடர்பாக எழுதப்படுகின்றது.ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் இனவாதத்தை தூண்டுவாரா?அவர் யாரோ ஒரு சிங்கள வேட்பாளரை நோக்கிச் செல்லும் வாக்குகளை கவர்வதன்மூலம்,அவரைத் தோற்கடித்து, அவருக்கு எதிராக நிற்கக்கூடிய மற்றொரு பிரதான சிங்கள வேட்பாளரை வெல்லவைக்கும் உள்நோக்கத்தோடு களம் இறக்கப்படுகின்றாரா?
இக் கேள்விக்கு விடையாக சில கேள்விகளையே திருப்பிக் கேட்கலாம்.சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் இப்பொழுது உறங்கு நிலையிலா உள்ளதா? அது இனிமேல்தான் தூண்டி விடப்படுவதால் விழித்தெழப்போகின்றதா ? .அப்படி என்றால் கிழக்கில் மேய்ச்சல் தரையை ஆக்கிரமிப்பது யார்? குருந்தூர் மலையில் மரபுரிமைச் சின்னங்களை ஆக்கிரமிப்பது யார்? வெடுக்கு நாறி மலையில் மரபுரிமைச் சொத்துக்களை ஆக்கிரமிப்பது யார்? பயங்கரவாதத் தடைச்சட்டத்தை புதிய வடிவத்தில் கொண்டுவர வேண்டும் என்று கேட்பது யார்? இனப் பிரச்சினைக்கு தீர்வாக 13ஐக் கடக்க கூடாது என்று சிந்திப்பது யார் ?
2009க்கு பின்னரும் ஆக்கிரமிப்பு ஒடுக்குமுறையும் அப்படியே உள்ளன.இனவாதம் உறங்கு நிலைக்குச் சென்று விட்டது என்று கூறும் எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியும் ஒடுக்குமுறையை மறைமுகமாக நியாயப்படுத்துகிறார் என்றுதான் ஏடுத்துக்கொள்ள வேண்டும். எனவே சிங்கள பவுத்த பெருந்தேசிய வாதத்தை இனிமேல்தான் ஒரு தமிழ் பொது வேட்பாளர் உசுப்பேத்த வேண்டும் என்பதல்ல.அது ஏற்கனவே ஆக்கிரமிப்பு மனோநிலையுடன் செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.
மேலும் ஒரு தமிழ் பொது வேட்பாளர் நாட்டை பிரிக்கச் சொல்லிக் கேட்கப் போவதில்லை. அவர் தமிழ் மக்களை ஒரு தேசமாக இருக்க விடுமாறு தான் கேட்கப் போகின்றார். தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருக்கவிரும்புவது குற்றமா ? இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை எனப்படுவது தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான்.இலங்கைத்தீவில் தமிழ்,சிங்கள,முஸ்லிம், மலையகம் ஆகிய நான்கு தேசிய இனங்கள் உண்டு என்பதனை ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான் இனப்பிரச்சினை. அதாவது தமிழ் மக்களின் தேசிய இருப்பை ஏற்றுக் கொள்ள மறுப்பது. எனவே தமிழ் மக்கள் தங்களுடைய தேசிய இருப்பை வெளிப்படுத்தும் விதத்தில் தமது தேசிய விருப்பை வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதனால் தென்னிலங்கையில் இனவாதம் தூண்டிவிடப்படும் என்று சொன்னால், தமிழ் மக்கள் இனவாதத்தைத் தூண்டாமல் முன்வைக்கக்கூடிய கோரிக்கைகள் எவை?
கடந்த 2015இல் இருந்து 2018 வரையிலும் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் விடயத்தில் சம்பந்தர் சிங்கள மக்களை கோபப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எப்படியெல்லாம் விட்டுக் கொடுத்தார் ? தமிழ் மக்களுக்கு அது சமஸ்டிப் பண்புடைய ஒரு தீர்வு என்று கூறினார். ஆனால் சிங்கள மக்களுக்கு சிங்கள கட்சிகள் அது ஒற்றையாட்சிக்குட்பட்டது என்று கூறின. அதற்கு எக்கிய ராஜ்ய என்று ஒரு புதுப் பெயரை வைத்தார்கள். ஒன்றுபட்ட இலங்கைக்குள் பிரிக்கப்படாத,பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள் என்றெல்லாம் சம்பந்தர் வார்த்தைகளைத் தெரிந்து எடுத்துப் பேசினார். விளைவாக அவருக்கு என்ன கிடைத்தது? எதிர்க்கட்சித் தலைவரின் மாளிகை கிடைத்தது. மற்றும்படி தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு கிடைத்தது?
2015இலிருந்து தொடங்கி ஒரு பரிசோதனை செய்தோம் அதில் தோல்வியடைந்து விட்டோம் என்ற பொருள்பட சுமந்திரன் வவுனியாவில் வைத்து 2021ஆம் ஆண்டு கூறினார்.அது ஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டுக் கடிதத்தை உருவாக்குவதற்காக கூட்டப்பட்ட கூட்டம். அதில் அவர் நிலைமாறு கால நீதி என்ற பரிசோதனையில் தாங்கள் தோற்றுப் போய்விட்டதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
இங்கு சம்பந்தரும் சுமந்திரனும் மட்டும் தோற்கவில்லை. செல்வநாயகம் தோற்றிருக்கிறார். அமிர்தலிங்கம் தோற்றிருக்கிறார். அதற்கு முன்பு ராமநாதன் தோற்றிருக்கிறார். கடந்த ஒரு நூற்றாண்டு முழுவதும் ஐக்கிய இலங்கையை கட்டி எழுப்புவதற்காக தமிழ் தலைவர்கள் முன்னெடுத்த எல்லா முயற்சிகளுமே தோற்கடிக்கப்பட்டிருக்கின்றன.இவ்வளவு தோல்விகளுக்கு பின்னரும் ஒரு புதிய பரிசோதனையைச் செய்யலாம் என்று சிந்தித்தால்,அது சிங்கள பௌத்த இனவாதத்தைத் தூண்டிவிடும் என்று சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் கூறுகின்றன.
அவர்கள் உண்மையாகவே இனவாதம் தூண்டி விடப்படும் என்று அஞ்சுகிறார்களா?அல்லது அவர்கள் டீல் செய்ய விரும்பும் அரசியல்வாதி தோற்றுவிடுவார் என்று அஞ்சுகிறார்களா? அப்படியாயின் அதற்கும் ஒரு தீர்வு உண்டு.ஓர் அரசியல் விமர்சகர் கூறுவதுபோல,தமிழ் மக்கள் தமது முதலாவது விருப்பு வாக்கை பொது வேட்பாளருக்கும் இரண்டாவது விருப்பு வாக்கை தங்களோடு உடன்படிக்கைக்குவரும் ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வழங்கலாம் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அந்த சிங்கள வேட்பாளர் அனைத்துலகக் கண்காணிப்பின் கீழ் தமிழ் மக்களோடு ஒரு பகிரங்க உடன்பாட்டுக்கு வர வேண்டும். வந்தால் அவருக்கு தமிழ் மக்கள் தங்களுடைய இரண்டாவது விருப்பு வாக்கை வழங்கலாம்.பொது வேட்பாளரைக் காட்டிப் பயமுறுத்தும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இதற்குப் பதில் கூறட்டும்.
கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்களின் வாக்குகளை,அதுவும் கேந்திர முக்கியத்துவம் மிக்க வாக்குகளை, வெற்றுக் காசோலையாக யாரோ ஒரு சிங்கள வேட்பாளரை நோக்கித் திருப்பிவிட்ட அரசியல்வாதிகள் இப்பொழுது தமிழ்ப்பொது வேட்பாளர் என்றதும் பதட்டமடைகிறார்கள்,மிரட்சியடைகிறார்கள்.இனவாதத்தைத் தூண்டி விடப் போகிறீர்கள் என்று எச்சரிக்கிறார்கள்.
ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக கேந்திர முக்கியத்துவம் மிக்க தமிழ் மக்களின் வாக்குகளை யாரோ ஒரு சிங்கள வேட்பாளரை நோக்கித் திருப்பி,அதன் மூலம் இவர்கள் தமது சொந்த வாக்காளர்களுக்குப் பெற்றுக் கொடுத்த தீர்வு என்ன?
கடந்த 15 ஆண்டுகளாக நடந்த எல்லா ஜனாதிபதி தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் ராஜபக்சங்களுக்கு எதிராக என்ற நிலைப்பாட்டில் இருந்து வாக்களித்திருக்கிறார்கள்.அவ்வாறு ராஜபக்ஷைகளுக்கு எதிராக என்று சிந்தித்த ஒரே காரணத்துக்காக,2010ல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தார்கள்.அவர் ராஜபக்சகளின் ஆணையை ஏற்று யுத்தத்தை வழி நடத்தியவர்.அதன்பின் அதே ராஜபக்சகளின் அமைச்சரவையில் இறுதிக்கட்டப் போரில் பதில் பாதுகாப்பு மந்திரியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தார்கள்.அதன் பின் 2019 ஆம் ஆண்டு சஜித்துக்கு வாக்களித்தார்கள்.
இவ்வாறாக மூன்று தடவைகளும் ராஜபக்சவுக்கு எதிராக என்ற ஒரே புள்ளியில் தமிழ் மக்கள் ஒப்பீட்டளவில் ஒற்றுமையாக நின்று முடிவெடுத்தார்கள். ஆனால் இங்கு ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும் ராஜபக்சக்கள் மட்டும் இனவாதத்துக்கு தலைமை தாங்கவில்லை. இலங்கைத்தீவில் இன ஒடுக்கு முறை என்பது நன்கு நிறுவனமயப்பட்ட ஒன்று.குறிப்பிட்ட காலகட்டத்தில் அதற்கு தலைமை தாங்கும் நபர்களை,குடும்பங்களை வைத்துக்கொண்டு அதனை அந்த குடும்பங்களின் குற்றமாக மட்டும் கருதக்கூடாது. அது ஒரு கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறை. சிங்கள பௌத்த அரசு இயந்திரம் என்ற கட்டமைப்பு அதை முன்னெடுக்கின்றது. எனவே இதில் ராஜபக்ச என்ற ஒரு குடும்பத்துக்கு எதிராக மட்டும் சிந்திப்பது என்பது அதன் கட்டமைப்பு சார்ந்த, நிறுவனமயப்பட்ட பரிமாணத்தை குறைத்து மதிப்பிடுவதுதான்.
அந்தக் கட்டமைப்பின் கைதிதான் ரணில். அந்தக் கட்டமைப்பின் கைதிதான் சஜித்.அந்தக் கட்டமைப்பின் கைதிதான் அனுரகுமார. எனவே அந்தக் கட்டமைப்புக்கு வெளியில் எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரும் கிடையாது. இதில் குறைந்த தீமை கூடிய தீமை என்ற வாதத்துக்கு இடமில்லை. அது ஒரு கட்டமைப்பு சார்ந்த ஒடுக்கு முறை. அதற்கு எதிராக தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாக கட்டமைப்பதுதான் தற்காப்பானது;பொருத்தமானது.அந்த அடிப்படையில் ஒரு குடும்பத்துக்கு எதிராக என்று சிந்தித்து வாக்களித்த மக்கள் தங்களை ஒரு தேசமாக கட்டி எழுப்புவதற்காக வாக்களித்தால் என்ன? கடந்த 15 ஆண்டுகளாக ஒரு குடும்பத்துக்கு எதிராக என்று கருதி யார் யாருக்கு வாக்களித்தார்களோ அவர்கள் யாருமே எதையுமே தமிழ் மக்களுக்குத் தீர்வாகப் பெற்றுத் தரவில்லை.
அதாவது இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் ஒரு புதிய யாப்பு இன்றுவரை உருவாக்கப்படவில்லை. அதை உருவாக்க எந்தத் தலைவராலுமே முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் அனைவரும் அந்தக் கட்டமைப்பின் கைதிகள்.
இப்படிப்பட்ட ஒரு பின்னணியில்,இம்முறை ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களின் பொது வேட்பாளராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. எனவே தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் குறைவு. படித்த ஆங்கிலம் தெரிந்த நடுத்தர வர்க்கம் சிலசமயம் அவருக்கு வாக்களிக்கக்கூடும். ஆனால் தமிழ்க் கூட்டு உளவியல் எனப்படுவது அவருக்கு நெருக்கமாக இல்லை.அடுத்தது சஜித்.ஓய்வு பெற்ற படைத்தளபதிகள் இப்பொழுது அவருடைய கட்சியில்தான் சேர்கிறார்கள்.அவர் தெளிவாகக் கூறுகிறார், 13 பிளஸ்தான்,அதைத் தாண்டிச் செல்லமாட்டேன் என்று. இலங்கைத்தீவின் பல்லினத்தன்மையை அங்கீகரித்து ஒரு புதிய யாப்பை உருவாக்க அவர் தயாரில்லை. அடுத்தது அனுர.அவரிடமும் தீர்வு இல்லை. பொருத்தமான ஒரு தீர்வை முன்வைத்து சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய அவர் தயாரில்லை. சிங்கள பௌத்த வாக்குகளை இழப்பதற்கு அவர் தயாரில்லை.
அதனால்,இந்த மூன்று வேட்பாளர்களில் யாருக்கு வாக்களித்தாலும் அது தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தின் தார்மீக நியாயத்தை பலவீனப்படுத்திவிடும்.எனவே தமது நீதிக்கான போராட்டத்தின் அடிப்படையாக இருக்கின்ற தங்களை ஒரு தேசமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நடைமுறைச் சாத்தியமான வழியில் வெளிப்படுத்துவதற்கு இந்தத் தேர்தலை தமிழ்மக்கள் பயன்படுத்தினால் என்ன?அரசாங்கமே ஒழுங்குபடுத்துகின்ற ஒரு தேர்தலை ஒரு மறைமுக பொதுசன வாக்கெடுப்பாக மாற்றினால் என்ன?
கடந்த 15 ஆண்டுகளாக கேந்திர முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகளை வெற்றுக் காசோலைகளாக பயன்படுத்தியதே ஒரு அரசியல் தவறு. கேந்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தில் காணப்படும் தமிழ் மக்கள் எல்லாப் பேரரசுகளினதும் இழு விசைகளுக்குள் காணப்படுகிறார்கள்.பேரரசுகளின் போட்டோ போட்டிக்குள் தமிழ் வாக்குகளின் பேர பலம் அதிகமானது. 2015 ஆம் ஆண்டு அதுதான் நடந்தது. எனவே தமிழ் மக்களின் புவிசார் அமைவிடத்தைக் கருதிக்கூறின்,தமிழ் வாக்குகள் கேந்திர முக்கியத்துவம் மிக்கவை. அவற்றை வெற்றுக் காசோலையாக வீணாக்கலாமா?