தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழகத்தின் தங்கச்சிமடம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தம்பதி இருவர் மற்றும் இலங்கைக்கு தப்பிச் செல்ல உதவிய ஆறு பேர் என 8 பேரை கைது செய்த தங்கச்சிமடம் பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியைச் சேர்ந்த சைபுல்லா நவீத், இம்ரான், நைனா முகமது, ரகுமான் உள்ளிட்ட நான்கு பேரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இலங்கைக்கு படகு மூலம் சிலரை அனுப்பத் திட்டமிட்டுள்ளமை பொலிஸாருக்குத் தெரிய வந்துள்ளது.
இன்று புதன்கிழமை இரவு தங்கச்சிமடம் மாந்தோப்பு கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் வழியாக வவுனியா தப்பி செல்ல திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்ததையடுத்து இலங்கை தம்பதிகள் இருவர் மற்றும் இலங்கைக்கு தப்பிச் செல்ல உதவிய ஆறு பேர் என மொத்தம் எட்டு பேரை தங்கச்சிமடம் பொலிசார் கைது செய்து தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் உள்ள எட்டு பேரிடம் மத்திய, மாநில உளவுத்துறை, மரைன் பொலிசார் மற்றும் சட்ட ஒழுங்கு பொலிசார் அடுத்தடுத்து தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைக்கு பின்னர் 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக தங்கச்சிமடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.