சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தங்களின் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி வெளியிட்டுள்ள தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில், உரிமைகள் மற்றும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தின் விளைவாக தொடங்கிய உலக தொழிலாளர் தினத்தின் 138 ஆவது வருடக் கொண்டாட்டத்தின் போது, ஒரு நாடாக நாம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் சவாலை முறியடிக்க வேண்டிய தவிர்க்க முடியாத பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பொருளாதார வீழ்ச்சியின் போது இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் தான் அதிகமான சவால்களை எதிர்கொண்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதுடன் பணவீக்கத்தை கணிசமான அளவிற்கு குறைத்து ரூபாயை பலப்படுத்த முடிந்திருப்பது அரசாங்கத்திற்குக் கிடைத்த வெற்றியாகும் என்றும் ஜனாதிபதி தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், உழைக்கும் மக்களை தொடர்ந்தும் வறியவர்களாகவே வைத்திருப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்றும் போராட்டமின்றி அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அஸ்வெசும மற்றும் உறுமய போன்ற திட்டங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதன் மூலம் அவர்களின் மேம்பாட்டிற்காக பரந்துபட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தினேஸ்குணவர்த்தன
இதேவேளை இக்கட்டான சவால்களை முறியடிக்க உழைக்கும் மக்களின் உதவியுடன் மிகவும் நிலைபேறானதும் நம்பகமானதுமான எதிர்காலத்தை அடைய ஒன்றிணையுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன மே தின செய்தியூடாக அழைப்பு விடுத்துள்ளார்.
எத்தகைய உடன்படிக்கைகளுக்கு மத்தியிலும் தொழிலாளர் உரிமைகளை புறக்கணிக்கும் வகையில் செயற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாச
அதேசமயம் பேரணிகளுக்கு ஏமாறாமல் நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் சொந்த காலில் நிற்கச் செய்யும் அரசாங்கத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனத வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
போலியான அலை ஊடாக திறமையற்றதொரு ஜனாதிபதியை பதவியில் அமர்த்தி நாடே வங்குரோத்து நிலைமைக்கு தள்ளப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் இவ்வருடம் மே தினம் கொண்டாடப்படும் போதும் எமது நாட்டு உழைக்கும் மக்கள் பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் நாளுக்கு நாள் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில், தற்போதுள்ள வாழ்க்கைச் செலவுக்கு சற்றும் பொருந்தாத சம்பளத்தால் வேலை செய்யும் தொழிலாளர் வர்க்கம் மிகவும் அவலம் நிறைந்த வாழ்க்கை வாழ வேண்டி ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் தொழிலாளர் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் தலைவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் கூட வாய் திறக்காமல் உள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்தோடு, அனைவரும் ஒன்றிணைந்து மக்களை ஒடுக்கும் இந்த பயங்கர அரசை விரட்டியடித்து மக்கள் சார், மக்களுக்காக அர்ப்பணித்துச் செயற்படும் அரசாங்கத்தையும், தலைவரையும் நியமித்து மீண்டும் ஒரு நாடாக எழுந்து நிற்க வேண்டிய தருணம் வந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.