அமெரிக்க பல்கலைக்கழகங்களில் முன்னெடுத்து வரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வசேத ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
காசாவில் போர்நிறுத்தம், இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் இராணுவ உதவி மற்றும் ஆயத விநியோகத்தை நிறுத்துதல், போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே மாணவர்கள் இவ்வாறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திவந்த மாணவர்களின் முகாம்களை கலவரத் தடுப்பு பொலிஸார் வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளனர்.
இதன்போது அங்கு போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மட்டுமன்றி, லாஸ் ஏஞ்சலீஸ் மாநில பல்கலைக்கழகத்திலும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குறித்த பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஹெமில்டன் அரங்கில் தடுப்புகள் அமைத்து மாணவர்களால் போராட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பொலிஸார் கடந்த புதன்கிழமை அங்கிருந்து மாணவர்களை வெளியேற்றியிருந்தனர்.
இவ்வாறு வெளியேற்றப்பட்ட மாணவர்கள் மீது இஸ்ரேலுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், இரண்டு தரப்பினரும் சுமார் 2 மணிநேரம்வரை மோதலில் ஈடுபட்டமையும் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சுமார் 300 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் போராட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா முழுவதும் இதுவரை சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அமெரிக்க அரசாங்கம் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை போராட்டங்களை கைவிடப் போதில்லை என மாணவர்கள் அறிவித்து, தொடர்ச்சியாக போராடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.