நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சவுக்கு சங்கரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க பொலீசார் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், சவுக்கு சங்கரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்குமாறு சைபர் கிரைம் போலீசார் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பிரபல யூ டியூப் வலைத்தளப் பதிவாளரான சவுக்கு சங்கர், அண்மையில் யூடியூப் சனலுக்கு அளித்த பேட்டியில் காவல்துறை அதிகாரிகள் குறித்து தரக்குறைவான கருத்துகளை பயன்படுத்தியிருந்தார்.
அத்துடன், பெண் போnலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான அவதூறான கருத்துகளை தெரிவித்து இருந்தமை பெரும் சர்ச்சையையும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து சவுக்கு சங்கரின் பேட்டிக்கு காவல்துறை அதிகாரிகள், மகளிர் போலீசார் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டி குறித்து, கோவை சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த பொலீசார் கோவைக்கு அவரை அழைத்து வந்தனர்.
இதனடிப்படையில், சவுக்கு சங்கர் மீது இந்திய தண்டனை சட்டம் 293 (பி), 509 மற்றும் 353 ஐபிசி RW பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு பிரிவு 67 உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சவுக்கு சங்கரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, சவுக்கு சங்கரின் உதவியாளர் மற்றும் கார் சாரதி ஆகியோர் கஞ்சா வழக்கில் கைதாகியுள்ளனர்.
கஞ்சா வைத்திருந்ததாக ராஜரத்தினம் மற்றும் ராம் பிரபுவை பொலீசார் கைது செய்துள்ள நிலையில், இது தொடர்பாக சவுக்கு சங்கர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கு சவுக்கு சங்கரை 5 நாள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்குமாறு சைபர் கிரைம் போலீசார் கோவை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.