வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை இன்றைய தினம் சனிக்கிழமை காலை ஆரம்பமானது.
திருநீற்று சித்தர் என அழைக்கப்படும், தவத்திரு. நா.க.சி.கணபதி கதிர்வேலு தலைமையில் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து, பாத யாத்திரை ஆரம்பமானது.
செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் சிறப்பு பூசைகள் இடம் பெற்று சந்நிதியான் ஆலய பூசகரினால் முருகப்பெருமானுடைய வேல் யாத்திரீகர் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான யாத்திரீகர்களுடன் முருக நாமத்தை உச்சரித்தவாறு கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பமாகியது.
இப் பாதயாத்திரையானது சந்நிதி-கதிர்காமம் பாதயாத்திரைக் குழுவின் ஏற்பாட்டில் 23ஆவது வருடமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
வடக்கு, கிழக்கு, ஊவா ஆகிய 3 மாகாணங்களிலும் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை ஆகிய 7 மாவட்டங்களை 55 நாட்களில் பாத யாத்திரை குழு கடக்க உள்ளது.
யாத்திரையின் போது சுமார் 98 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கும் இப் புனித பாதயாத்திரை இலங்கையின் மிகமிகநீண்ட தூர பாதயாத்திரையாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.