ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், தாம் அணுகுண்டுகளை தயாரிப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் உதவியாளர் கமால் கராசி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அணுகுண்டை உருவாக்கும் முடிவு இதுவரை எங்களிடம் இல்லை. ஆனால் ஈரானின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினாலோ தங்கள் இராணுவக் கோட்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரானின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரபேல் கிராஸி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது, ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகளை வீசியது.
சுமார் 5 மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 99 சதவீதமான குண்டுகளை அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடுவானில் இடைமறித்து அழித்தன.
இஸ்ரேல் – ஈரானின் இந்தத் தாக்குதல், 3 ஆம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் எழுந்திருந்த நிலையில், சர்வதேச சமூகங்களின் அழுத்தத்தால் பதற்றம் சற்று குறைவடைந்திருந்திருந்தது.
இந்நிலையில், மீண்டும் ஈரான் மதத் தலைவர் ஆலோசகர் விடுத்துள்ள ‘அணுகுண்டு தயாரிப்போம்’ என்ற எச்சரிக்கை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.