மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில், படுகாயமடைந்த அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமரான 59 வயதான ராபர்ட் ஃபிக்கோ மீது நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
அந்நாட்டின் தலைநகர் ப்ராகுக்கு 150 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ஹாண்ட்லோவா நகரில் தனது ஆதரவாளர்களிடையே பிரதமர் ராபர்ட் ஃபிக்கோ உரையாற்றிக் கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அப்போது அவரை நோக்கி ஒருவர் 4 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார் என்றும் இதில் ஃபிக்கோவின் வயிற்றுப் பகுதியில் குண்டுகள் பாய்ந்ததாகவும் அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து, படுகாயமடைந்த அந்நாட்டு பிரதமர் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலதிக சிகிச்சைக்காக பானஸ்க் பிஸ்ட்ரிகா பகுதியில் உள்ள வைத்திசாலைக்கு ஹெலிகாப்டர் மூலம் அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மீது தாக்குதல் நடத்துவது ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றும் நாட்டில் பரப்பப்படும் வெறுப்புணர்வே இதுபோன்ற தாக்குதலுக்குக் காரணம் என்றும் அந்நாட்டு ஜனாதிபதி ஜுவானா கேபுடோவா தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஆதரவாளரான ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமரான ராபர்ட் ஃபிக்கோ மீது, நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து இதுவரை தெரியவரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான ஸ்லோவாக்கியாவின் பிரதமரை படுகொலை செய்ய முயற்சி நடைபெற்றுள்ள விவகாரமானது ஐரோப்பா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு 3 வாரங்களுக்கு முன்னர் இந்தப் படுகொலை முயற்சி நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.