நாட்டில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொடர் வேலைநிறுத்தம் காரணமாக பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டதாரிகளுக்கான அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளங்கலை மாணவர்கள் திட்டமிட்ட நேரத்தில் பட்டப்படிப்பை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.
இதுதவிர, இந்த ஆண்டு உயர்தரத்தில் சித்தியடைந்தவர்களுக்கு பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் விவரங்கள் அடங்கிய பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடுகளை வெளியிடுவதும் தாமதமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே பணிப்புறக்கணிப்பை கல்வி சாரா ஊழியர்கள் கைவிடவேண்டும் என்றும் இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான யோசனைகளை கல்வி அமைச்சர் ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக பேராசிரியர் சந்தன உடவத்த குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.