பொருளாதார மாற்று யோசனை’ மற்றும் ‘பொது நிதி மேலாண்மை யோசனை’ ஆகிய இரண்டு புதிய சட்டமூலங்கள் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஆளுங் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் குறித்த இரண்டு சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புதிய சட்டமூலங்கள் தொடர்பாக நாடாளுமன்றில் எதிர்வரும் நாட்களில் விவாதம் நடைபெறவுள்ளது.
சட்டமூலங்கள்நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்கள் உயர்நீதிமன்றில் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கு இரண்டுவார காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே இரண்டு முக்கிய சட்டமூலங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பொருளாதார மாற்றத்துக்கான வரைவின் பிரகாரம், இலங்கை முதலீட்டுச் சபையை இல்லாதொழித்து, பொருளாதார ஆணைக்குழு உள்ளிட்ட 5 நிறுவனங்களை நிறுவுவதற்கு இதனூடாக முன்மொழியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டால் முதலீட்டாளர்கள் நாட்டில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என இலங்கை முதலீட்டுச் சபையின் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஓரு சிலரின் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இலங்கை முதலீட்டுச் சபையின் தொழிற்சங்கங்கள் அறிக்கையின் ஊடாக தெரிவித்துள்ளன.