சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழையுடனான வானிலை காரணமாக 11 ஆயிரத்து 949 குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 627 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை மற்றும் மேல் கொத்மலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக, செயின்ட் கிளேர் மற்றும் டெவோன் ஆகிய நீழ்வீழ்ச்சிகளின் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளது. அத்துடன் விமலசுரேந்திர, கனியன், லக்ஷபான, நியூ லக்ஷபான, பொல்பிட்டிய நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகபட்ச கொள்ளளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின் உற்பத்தி நிலைய பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.