”பாலித ரங்கே பண்டார அரசியலில் இருந்து வெளியேறவேண்டும்” என சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி நவரத்ன பண்டார தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஒரு முழு முட்டாள். நாட்டின் அரசியலமைப்பு தொடர்பாக விளக்கம் இல்லமால் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு தயங்குகின்ற ரங்கே பண்டார அரசியிலில் இருந்து வெளியேறவேண்டும். ரணிலின் மாமனாரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன அதிகாரத்தில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த அரசியலமைப்பினை கொண்டு வந்தார்.
பொது வாக்கெடுப்பு என்பது ஜனநாயகக் கட்டமைப்பிலுள்ள ஒரு சரத்தாகவே நாங்கள் கருதுகிறோம். ஆனால், 1983 ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பை கொண்டு வந்து ஜே.ஆர். தனது ஆட்சியயை தொடர்ந்திருந்தார். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மக்கள் ஆணை மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதியே பொதுவாக்கெடுப்பை நடத்தமுடியும்.
ஆனால், ரணில் விக்கிரமசிங்கவினால் இதனை முன்னெடுக்கமுடியாது. பதவிகாலம் நிறைவடைந்த பின்னர் ஒருநாள் கூட ஆட்சியில் இருக்கமுடியாது. தேர்தலை நடத்தி மீண்டும் மக்களின் ஆணையுடனே புதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வர வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் அவ்வாறுதான் கூறப்பட்டுள்ளது.
பாலித ரங்கே பண்டார குறிப்பிடுவது நாட்டின் அரசியலமைப்புக்கு முரணான யோசனையாகும். ரணில் விக்கிரமசிங்க வெறும் தேசியப்பட்டியலில் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வந்தவராவார். பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர்.
இவ்வாறு வந்தவர் இன்று சில காலம் இந்த பதிவியில் தொடர விரும்புகிறார். இது நகைச்சுவைக்குரியது. பொது வாக்கெடுப்பு நடத்தப்படுமாயின் மூன்றில் இரண்டு பொரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் திர்மானம் நிறைவேற்றப்பட்டவேண்டும்.
அதை நிறைவேற்றினாலும் மீண்டும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்.
அப்போதுதான் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியும். இன்று இலங்கையில் உள்ள பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களை காசு கொடுத்து வாங்கமுடியும். எனவே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டையும் பெறமுடியும். அவ்வாறு செய்வது கீழ்த்தரமான செயற்பாடாகும்.
இந்த அரசாங்கம் பாரிய அச்சத்தில் காணப்படுகின்றது. ஆட்சி அதிகாரம் மேல் தட்டு வர்க்கத்திடம் இருந்து ஒரு சாதாரண குழுவிற்கு சென்று விடுமோ என்ற அச்சத்தில் அரசாங்கம் உள்ளது” இவ்வாறு நவரத்ன பண்டார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு காலம் தாழ்த்தி நடத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.