கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த நிலையில் எரிபொருள் கசிவு ஏற்பட்ட கப்பலை பொறுப்பேற்றுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்திய நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பலொன்று பழுதுபார்ப்பதற்காக அண்மையில், கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத்தந்துள்ள நிலையில், குறித்த கப்பலில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையால் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், கப்பலில் இருந்து ஹைட்ராலிக் (Hydraulic) எண்ணெய் கசிந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டமை தொடர்பாக கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் காப்புறுதி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
மேலும் கப்பலுக்கு சொந்தமான நிறுவனமும் தவறை ஏற்றுக்கொண்டு இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் குறித்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்தோடு, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ் குறித்த சம்பவத்திற்கு நஷ்டஈடு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், குறித்த இந்திய கப்பலின் கெப்டன் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வகையில் அவருக்கு பயணத்தடை விதிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு துறைமுக பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.