நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக பாதிக்கப்பட்டோர் தொடர்பாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 7 ஆயிரத்து 28 குடும்பங்களை சேர்ந்த 25 ஆயிரத்து 401 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பதுளை, நுவரெலியா, புத்தளம், காலி, இரத்தினபுரி, ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 8 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 19 பேர் காயமடைந்துள்ளதுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்தவகையில், கம்பஹா மாவட்டத்தில் 1616 குடும்பங்களை சேர்ந்த 6926 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் களுத்துறை மாவட்டத்தில் 103 குடும்பங்களைச் சேர்ந்த 3658 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்டத்தில் 891 குடும்பங்களை சேர்ந்த 2,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் குருநாகல் மாவட்டத்தில் 48 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம், தென்மாகாணத்தில் 6651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஒருவர் மரணமடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காலி மாவட்டத்தில் 1321 குடும்பங்களைச் சேர்ந்த 4399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும்
இரத்தினபுரி மாவட்டத்தில் 786 குடும்பங்களை சேர்ந்த 2959 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.