இலங்கை சுங்கத் திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு புதிய அதிகாரிகளை இணைத்துக்கொள்வதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.
சுங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் கொழும்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” சுங்கத்துறை உதவி கண்காணிப்பாளர் பதவி வெற்றிடமாகவுள்ளது. சுங்கத்துறை ஆய்வாளர் பதவியும் வெற்றிடமாகவுள்ளது. சுங்கத்துறையின் செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக புதியவர்களை நியமிக்கவுள்ளோம்.
இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலதிகாரிகளுக்கு அழுத்தங்களை கொடுத்து பதவிகளுக்கு வருவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். அவ்வாறு வருவதற்கு இடமளிக்கமுடியாது.
இந்த பதவி நிலைகளுக்கான நேர்காணல்கள் இடம்பெறும். அதற்காக தகுதியுள்ளவர்கள் தொிவு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்கள் பதிவு செய்த வரிசைப்படியே முன்னுரிமை வழங்கப்படும். மாறாக மதிப்பெண்களின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படமாட்டாது.
படித்தவர்களுக்கு இந்த நாட்டில் அதிக வருமானம் தேடும் நிறுவனத்தில் சேர்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெளிப்படையான மற்றும் முன்மாதிரியான ஆட்சேர்ப்பு நடைபெறுவதால் சம்பந்தப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு புறம்பாக செயற்படுவதற்கு அனுமதிக்க மாட்டேன். இதனை பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.