ஜம்மு-காஷ்மீரில் பஸ்ஸொன்று பள்ளத்தில் கவிழ்ந்து வித்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆன்மிக சுற்றுலாவுக்காக பயணிகளை ஏற்றிச் சென்ற குறித்த பஸ், ஜம்மு காஷ்மீர் அக்னூர் பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில், 15 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் அக்னூரிலுள்ள வைத்தியசாலை மற்றும் ஜம்முவிலுள்ள அரச மருத்துவக்கல்லூரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான குறித்த பஸ், உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸை சேர்ந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு, ஹரியானாவின் குருக்ஷேத்ராவில் இருந்து ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள சிவ்கோரி ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தது.
இதன்போது, ஜம்மு – பூஞ்ச் அதிவேக வீதியில் காளி தார் மந்திர் அருகே சாரதியின் கவனக்குறைவால் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தையறிந்த இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தனது எக்ஸ் தளத்தில் கவலையை வெளியிட்டுள்ளார்.
”ஜம்முவுக்கு அருகில் அக்னூரில் நடந்த பஸ் விபத்து குறித்து அறிந்தவுடன் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வேதனை அடைந்தேன். துயரமடைந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.