இந்தியாவின் 18-வது மக்களவைக்கான தேர்தல் அட்டவணை கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி 102 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 40 தொகுதிகளும் அடங்கும்.
இதையடுத்து ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 மற்றும் 25ஆம்திகதிகளில் தொடர்ச்சியாக 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்தன.
7-வது மற்றும் இறுதிக்கட்டமாக 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று தேர்தல் நடைபெறும் 57 தொகுதிகளில், பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் அடங்கும். இங்கு அவர் 3-வது முறையாக களம் காண்கிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் போட்டியிடுகிறார்.
பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டு கன்னியாகுமரியில் 3 நாட்கள் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவர் தனது எக்ஸ் தள பதிவில்,
இன்று 2024 நாடாளுமன்ற தேர்தலின் இறுதிக்கட்டம். இளைஞர்கள் மற்றும் இளம் பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கள் வாக்குகளை பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன். ஒன்றாக இணைந்து நமது ஜனநாயகத்தை மேலும் துடிப்பானதாகவும், பங்கேற்பு மிக்கதாகவும் மாற்றுவோம் என்று பதிவிட்டுள்ளார்.