தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சிக்கு அதிகாரம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்
ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் உறுப்புரிமை வழங்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்திருந்தார்
இந்நிலையில், இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய தேசியக் கட்சி இந்த நாட்டில் கேலிக்கைக்குரிய ஒரு கட்சியாக மாறிவருகின்றமை கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு தொடர்பாக அறியாத ஒருவரே ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக செயற்படுவதாகவும், 2020 ஆம் ஆண்டின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை தனக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சிக்கு அதிகாரம் இல்லை எனவும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் கடந்த நான்கு வருடங்களாக தான் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த ரஞ்சித் மத்தும பண்டார, தேர்தலில் வெற்றிபெறும் கூட்டணியாகவே ஐக்கிய மக்கள் சக்தி உருவாகியிருப்பதாகவும், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் கேலிக்கையான விடயங்களை தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நாட்டில் மக்கள் ஆதரவு சஜித் பிரேமதாகவுக்கே உள்ளதாகவும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் தாமே அமோக வெற்றி பெறுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.