இவ்வார இறுதியில், இந்திய குடியரசுத் தலைவா் மாளிகையில் மூன்றாவது முறையாகவும் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
குறித்த பதவியேற்பு விழாவிற்கு, இலங்கை மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட பல வெளிநாட்டு தலைவர்களை இந்தியா அழைக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாரத திருவிழா என்றழைக்கப்படுகின்ற இந்தியாவின் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்து, அதன் முடிவுகளும் கடந்த 4 ஆம் திகதி வெளியானது.
இந்நிலையில், மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக தனித்து அதிகபட்சமாக 240 இடங்களை மட்டுமே வென்றது.
அத்துடன், ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 16 இடங்களையும், பீகாா் முதல்வா் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் கைப்பற்றின.
அதன்படி, பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களை கைப்பற்றாத பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவோடே ஆட்சியமைக்கவுள்ளது.
இந்நிலையில், மத்தியில் புதிய ஆட்சியமைப்பது மற்றும் அமைச்சரவை இடங்கள் தொடா்பாக பிரதமா் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவா்கள் நேற்று டெல்லியில் கூட்டமொன்றை நடத்தியிருந்தனர்.
குறித்த கூட்டத்தில், தெலுங்கு தேசம் தலைவா் சந்திரபாபு நாயுடு, பீகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ்குமாா், மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவா் சிராக் பஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவா்கள் பற்கேற்றிருந்தனர்.
இதன்போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமா் நரேந்திர மோடி ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில், மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்க உள்ளார்.
மோடியின் பதவியேற்பு விழாவிற்கு வங்கதேசம், இலங்கை, பூடான், நேபாளம் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் முக்கிய தலைவர்கள் அழைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.