மேல் மாகாணம், கொட்டிகாவத்தை மற்றும் கொலன்னாவை கல்வி வலயங்களில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பு மத்திய நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 55 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல பிரதேசத்தின் பல பிரிவுகளிலுள்ள அரச பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நிவித்திகல கல்வி வலயத்தின் அலபட மற்றும் அயகம பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களில் தொடர்ந்தும் மோசமான வானிலை நிலவி வருவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பாதுகாப்பு மத்திய நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
எனினும், எதிர்வரும் நாட்களில் வானிலையின் அடிப்படையில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பாக தீர்மானங்கள் எடுப்பதற்கு வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சப்ரகமுவ மாகாண சபையின் ஏனைய கல்வி வலயங்கள் மற்றும் பாதிப்பு குறைவான பிரதேசங்களில் வழமை போன்று பாடசாலைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.