”கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தும் அனைத்து அனுமதியற்ற கட்டுமானங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சத்யானந்தா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சத்யானந்தா இதனைக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போதுள்ள ஈரநிலங்களை பாதுகாப்பதன் மூலம் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியும்.
கொழும்பு மாநகரப் பகுதி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் உள்ள சிறிய நீர்வழிகள் மற்றும் பக்கவாட்டு வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளமையே வெள்ளப்பெருக்குக்கான பிரதான காரணமாக இனங்காணப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ளத்தை குறைப்பதற்காக காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் 7 விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
அதன்படி, கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தும் அனைத்து அனுமதியற்ற கட்டுமானங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக அனுமதியற்ற நிர்மாணங்களை அகற்றுவதற்கான சுற்றறிக்கையை வெளியிடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இரண்டு வாரங்களுக்குள் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கை வழங்கப்படும்” இவ்வாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சத்யானந்தா தெரிவித்துள்ளார்.