குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்காக ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
மாகாண ஆளுநர்களுடன் நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” முதலாம் தரம் முதல் 11ஆம் தரம் வரை கல்வி கற்கும் ஒரு இலட்சம் மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
அந்தவகையில் மேல் மாகாணத்திற்கு 16,152 புலமைப்பரிசில்களும், வடமாகாணத்திற்கு 8,636 புலமைப்பரிசில்களும், ஏனைய மாகாணங்களுக்கு 10,000 புலமைப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
இப் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், ஒரு மாதத்திற்கு ரூ.3,000/- வீதம் 12 மாதங்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
இதேவேளை க.பொ.த உயர்தரம் கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு மாதம் 6,000 ரூபாய் வீதம் 24 மாதங்கள் புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் பணிகள் தற்போது நிறைவுபெற்றுள்ளன.
அந்தவகையில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 2000 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது” இவ்வாறு சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.