புலி, தேசிய சின்னம் என்பதனால், அதனை எமக்கு தர மறுத்த தேர்தல் ஆணையகம், தேசிய மலரான தாமரையை பா.ஜனதா கட்சிக்கு எவ்வாறு கொடுத்தார்கள் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஊடகவியலாளர்களை சந்தித்தபோது இதனைத் தெரிவித்த சீமான், நாம் தமிழர் கட்சிக்கென தனி ஒரு சின்னம் கேட்கவுள்ளதாகவும், அதவும் புலிச் சின்னத்தையே கேட்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாம் தமிழர் கட்சி எப்போதும் போல் தனித்து போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார்.
மாநில கட்சி அந்தஸ்து கிடைத்தவுடன் நாம் தமிழர் கட்சி சந்திக்கும் முதல் இடைத்தேர்தலில் இதுவெனவும், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மைக் சின்னத்திலேயே இடைத்தேர்தலிலும் போட்டியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், புலி தேசிய சின்னம் என்பதனால் அந்த சின்னத்தை தங்களுக்கு தர தேர்தல் ஆணையம் ஏற்கனவே மறுத்து விட்டதாக தெரிவித்த சீமான், அப்படியாயின் தேசிய மலரான தாமரையை எப்படி பா.ஜனதா கட்சிக்கு கொடுத்தது என கேள்வியெழுப்பியுள்ளார்.
ஒருவேளை புலி சின்னம் கிடைக்காத பட்சத்தில் விவசாயி சின்னம் கேட்கவுள்ளதாகவும், ஆனால் முன்பு வைத்திருந்த கரும்பு விவசாயி சின்னம் வேண்டாம் என முடிவுசெய்துள்ளதாக தெரிவித்த சீமான், வேறொரு விவசாயி சின்னம் ஒன்றையே கேட்கவுள்ளதாக குறிப்பிட்டார்.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக செயற்பட்ட நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 06 ஆம் திகதி திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி வெற்றிடமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் ஆரம்பமானது.
இந்நிலையிலேயே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மைக் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக சீமான் கூறியுள்ளளார்.