சோமாலியாவில் இராணுவ வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 8 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சா்வதேச செய்திகள் தெரவிக்கின்றன.
ஆபிரிக்க நாடான சோமாலியாவில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில், அவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எனினும் தாக்குதல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், சோமாலியாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள பைடோவா நகரிலிருந்து பெர்டேல் நகருக்கு சென்ற இராணுவ வாகனங்களை குறிவைத்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதாவது, இராணுவ வீரர்களின் வாகனங்கள் பயணித்த வீதியில், வெடிகுண்டை புதைத்து வைத்த பயங்கரவாதிகள், இராணுவ வாகனம் பயணிக்கையில் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில், ஒரு வாகனம் வெடித்துச் சிதறியதில், இராணுவ தளபதி முகமது தேரே (Mohamed Dhere) உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு அல் கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.