சர்வதேச ஈரநில பூங்கா ஒன்றியத்தின் முதலாவது மாநாடு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
உலகலாவிய ரீதியில் 15 நாடுகளில் உள்ள 70 இக்கும் மேற்பட்ட ஈரநிலப் பூங்காக்களில் இருந்து சுமார் 100 பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 5 ஈரநில பூங்கா பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளனர். அந்தவகையில், இந்தியா சார்பில் 6 பிரதிநிதிகளும், கொரியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் 18 பிரதிநிதிகளும், சீனாவை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 பிரதிநிதிகளும், பிலிப்பைன்ஸை பிரதிநிதித்துவப்படுத்திய 7 பிரதிநிதிகளும் மற்றும் மியன்மார், மொங்கோலியா, ஜேர்மனி, நேபாளம், ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தலா 2 பிரதிநிதிகளும், நியூஸிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 3 பிரதிநிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நாட்டிற்கு வருகைதந்துள்ளனர்.
மேலும், மலேசியா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பானை பிரதிநிதித்துவப்படுத்தும் தலா ஒரு பிரதிநிதிகள் மூவர் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள பிரதிநிதிகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.