ஒருநாடு தாக்கப்பட்டால் மற்றைய நாடு உடனடி இராணுவ உதவியை வழங்குவதற்கான உடன்படிக்கையில் ரஷ்யாவும் வடகொரியாவும் கைச்சாத்திட்டுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வடகொரிய விஜயத்தின்போது இரு நாடுகளின் தலைவர்களும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இரண்டு நாடுகளிற்கும் இடையில் கடந்த பல வருடங்களாக கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளில் இதுவே மிக முக்கியமான உடன்படிக்கை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த உடன்படிக்கை பனிப்போர்காலத்தின் 1961 ஆம் ஆண்டு பரஸ்பர பாதுகாப்பு உறுதிமொழிக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் முயற்சி என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த உடன்படிக்கை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரத்தை கொண்டுள்ள நாட்டுடன் வடகொரிய ஜனாதிபதியின் உறவுகளை வலுப்படுத்தியுள்ளது.
இரண்டு நாடுகளில் ஒரு நாடு இராணுவ ரீதியான நடவடிக்கையை எதிர்கொண்டால் மற்றைய நாடு உடனடியாக இராணுவ உதவியையும் ஏனைய உதவிகளையும் வழங்கவேண்டும் என உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், நேற்று தனியாக சந்தித்து கலந்துரையாடினர்.
இதனைத்தொடர்ந்து, பொருளாதாரம், இராணுவத் துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக இணைந்து செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தங்கள் மீது ஏதாவது தாக்குதல்கள் நடந்தால், பரஸ்பர இராணுவ உதவிகளை செய்வது என இதன்போது, இரு தரப்பும் ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.