இலங்கை மகளிர் அணிக்கும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்குக்கும், இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் போட்டி சமநிலையிலுள்ளது.
தொடரின் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி வெற்றியீட்டியதன் ஊடாக தொடர் சமநிலையில் காணப்படுகின்றது. ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 89 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட தாமதத்தினால் இரண்டாவது இன்னிங்ஸ் 15 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதுடன், DLS முறைப்படி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 99 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலங்கை அணி சார்பில் சமரி அத்தபத்து 26 ஓட்டங்களையும், விஷ்மி குணரத்ன 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பந்து வீச்சில் அபி பிளெட்சர் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
99 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 14.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஹெய்லி மெத்தியுஸ் 29 ஓட்டங்களையும், ஸ்டெபனி டெய்லர் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதன்படி, இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியதுடன், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற ரீதியில் சமநிலையில் உள்ளது.