எதிர்வரும் 2032 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு எதிரான கடன் சதவீதத்தை 95 சதவீதமாக குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று விசேட காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் கடன் மறுசீரமைபே முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடன் மறுசீரமைப்பின் இரண்டு முக்கிய கட்டங்களை நாம் இன்று நிறைவு செய்துள்ளதாகவு அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரஜை என்ற வகையில் தான மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த செஹான் மேசசிங்க, கடன் சீரமைப்பை மூன்று முக்கிய கட்டங்களில் திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதிகாரப்பூர்வ கடன் குழுவின் இணைத் தலைவராக இருந்த பிரான்ஸ், இந்தியா மற்றும் சீனா மற்றும் பாரிஸ் கிளப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடன் மறுசீரமைப்பு அல்லது கடன் சிகிச்சைக்கு ஒப்புக்கொண்ட சீனா எக்ஸிம் வங்கிக்கு தாம் நன்றி கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 2032 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு எதிராக நமது கடன் சதவீதத்தை 95 சதவீதமாக குறைப்பதே முதல் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2022 இல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் சதவீதம் 128 சதவீதமாக ஆக இருந்ததாகவும், 2032 ஆம் ஆண்டிற்குள் அதை 95 சதவீதமாக குறைப்பதே தங்களது இலக்கு எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.