T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி பிரிஜ்டவுனில் இலங்கை நேரப்படி இன்றிரவு 8 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இன்றைய இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமாயின் 13 ஆண்டுகளின் பின்னர் இந்திய அணி வெற்றி பெற்ற முதலாவது உலகக் கிண்ணமாக இது அமையவுள்ளதுடன், தென்னாபிரிக்க அணி வெற்றி பெறுமாயின் அது அந்த அணியின் முதலாவது உலகக் கிண்ணமாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
9வது T20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்றிருந்தன.
நடப்பு சாம்பியனான, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட முன்னணி அணிகள் தொடரில் இருந்து வெளியேறியிருந்தன.
இதற்கு முன்னர் இரண்டு வகையான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் 7 தடவைகள் அரை இறுதிப் போட்டிகளுடன் துரதிர்ஷ்டத்தால் வெளியேறியிருந்த தென் ஆபிரிக்காவுக்கு இம்முறை இறுதிப் போட்டிக்கு முதன் முதலில் முன்னேறியுள்ளதுடன் கிண்ணத்தை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது.
இந்த வருட T20 உலகக் கிண்ணப் போட்டியில் குழுநிலையிலும், சுப்பர் 8 இலும் தோல்வி அடையாத அணிகளாக இந்தியாவும், தென் ஆபிரிக்காவும் அரை இறுதிகளில் விளையாடுவதற்கு தகதிபெற்றுள்ளன.
இதேவேளை பொறுமையும் கட்டுப்பாடும் தங்களது வெற்றிக்கு காரணம் என குறிப்பிட்ட இந்திய அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, மைதானங்களின் நிலைமைகளுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொண்டு விளையாடியபோது சாதகமான முடிவுகள் கிடைத்திருந்தாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கூட்டு முயற்சியே தங்களது வெற்றிக்கு காரணம் எனக் கூறிய தென் ஆபிரிக்க அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம், தங்களது முதல் முயற்சியில் சாதிக்க காத்திருப்பதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.